search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்படும் போது எடுத்த படம்.
    X
    பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்படும் போது எடுத்த படம்.

    கணவருக்கு தற்கொலை மிரட்டல் விடுக்க செல்போன் டவரில் ஏறிய இளம்பெண்- விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்

    கேரளாவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை மிரட்டல் விடுக்க செல்போன் டவரில் ஏறிய இளம்பெண்ணை, தேனீக்கள் விரட்டி, விரட்டி கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    திருவனந்தபுரம்:

    தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் விஜய் மணி. இவரது மனைவி அம்பு ரோசி (வயது 23).

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கேரளாவில் காயங்குளம் பகுதியில் வசித்து வருகிறார்கள். கூலி தொழிலாளியான விஜய் மணிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு தகராறு மூண்டது.

    இதனால் விஜய்மணி, தனது மனைவியை பிரிந்து தனியாக சென்று விட்டார். அப்போது குழந்தையையும் தூக்கிச் சென்று விட்டார்.

    கணவரிடம் இருந்து குழந்தையை மீட்க அம்புரோசி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எதுவும் பலனளிக்காததால் அவர் நேற்று மாலை காயங்குளத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சென்றார்.

    அங்கிருந்த 80 அடி உயர செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். கணவரிடம் இருக்கும் குழந்தையை உடனே மீட்டு தரவேண்டும், இல்லையேல் கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார்.

    இதனை கண்ட அலுவலக ஊழியர்கள், தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அம்பு ரோசியை கீழே இறங்குமாறு கூறினர்.

    ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து மேலேயே நின்று கொண்டிருந்தார். அப்போது டவரில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென அம்புரோசியை கொட்ட தொடங்கியது. இதனால் அங்குமிங்கும் ஓட தொடங்கிய அம்புரோசி, வலி தாங்க முடியாமல் கீழே குதித்தார்.

    அவர் குதிக்க போவதை அறிந்து தீயணைப்பு வீரர்கள் கீழே வலை விரித்து அவரை லாவகமாக பிடித்தனர். இதில் அம்புரோசி லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். பின்னர் அவரை ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து காயங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×