search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜோத்பூர் வன்முறை
    X
    ஜோத்பூர் வன்முறை

    ஜோத்பூர் வன்முறை: இதுவரை 140 பேர் கைது- மே 6 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையின்போது கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில், 4 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.  

    இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோத்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.

    ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா ஆகிய போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு இடங்களில் நேற்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஊரடங்கு நாளை வரை நீட்டித்து மாவட்ட காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வன்முறை சம்பவத்தில் நேற்று வரை 97 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இது 140-ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மேலும், இந்த ஊரடங்கு உத்தரவில் தேர்வுக்கு செல்ல இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவ சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், வங்கி அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளர்கள், செய்தித்தாள்களை விநியோகிப்பவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை மதிப்பிட்டு மொபைல் இணைய சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படம் என்று ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷூ குப்தா தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. பொருளாதார நெருக்கடி இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும்- இலங்கை அரசு ஒப்புதல்
    Next Story
    ×