
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டியது.
பெங்களூரு எலேச்சனஹள்ளி, பயாசாபாத் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் அதிகளவு தேங்கியது.
பன்னர்கட்டா சாலையில் கூடைப்பந்து ஸ்டேடியம் அருகே மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் உண்டானது. உத்தரஹள்ளியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தன.
கோலார் மாவட்டம் உரிகம்பட்டி சிவன் கோவில் முன்பு தென்னை மரத்தில் இடி விழுந்ததால் மரம் தீ பிடித்து எரிந்தது. விஜய்பூர் மாவட்டத்தில் இடி தாக்கியதில் மரமசப் ஜாதகன்(வயது 42) என்பவர் உயிரிழந்தார்.
பெங்களூரு மங்கம்மன்பள்ளியைச் சேர்ந்த 21 வயதான வசந்த் என்பவர் மழையால் மின்சாரம் தாக்கி பலியானார்.
பழ வியாபாரியான இவர் மின்கம்பத்தில் அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஜெயநகர், தெற்கு மற்றும் வட்டம், பெங்களூர் நகர், பனசங்கரி, வில்சன் கார்டன், டவுன் ஹால், மைசூர் சாலை, கத்ரிகுப்பே, பத்மநாபநகர், மெஜஸ்டிக் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
மழை காரணமாக சிவாஜிநகர் முழுவதும் மின் வெட்டு ஏற்பட்டது. கடும் வெயிலால் சோர்ந்து போன மக்கள் மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.