search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களவை
    X
    மாநிலங்களவை

    எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கும்படி பல்வேறு உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை அவைத்தலைவர்  ஏற்றுக்கொள்ளவில்லை. 

    இதனால், எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

    பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு குறித்து விவாதிக்கும்படி மீண்டும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கும்படி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவையை நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பணி பற்றிய விவாதத்திற்கு பதிலளிக்க தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவை அழைத்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சிலர் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர். இதனால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சாஸ்மித் பத்ரா அறிவித்தார்.

    Next Story
    ×