search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஈஸ்வரப்பா,  ஹலால் இறைச்சி
    X
    ஈஸ்வரப்பா, ஹலால் இறைச்சி

    கர்நாடகாவில் கிளம்பியது ஹலால் சர்ச்சை- சில கட்சிகளால் உருவாக்கப்பட்டது என மந்திரி ஈஸ்வரப்பா கருத்து

    ஹலால் விவகாரத்தில் மக்களின் கருத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் மற்றும் கோவில்கள் அருகே இந்துக்கள் அல்லாத வியாபாரிகள் கடைகள் வைக்க தடை உள்ளிட்ட பிரச்சினைகள் வெடித்துள்ள நிலையில், தற்போது ஹலால் இறைச்சி பொருட்கள் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

    அம்மாநிலத்தில் செயல்படும் இந்து ஜனஜக்ருதி சமிதி, ஸ்ரீராம சேனே, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள், ஹலால் இறைச்சி உணவு பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

    கடந்த ஒன்றாம் தேதி கர்நாடகாவின் பத்ராவதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஹலால் உணவை வழங்கக் கூடாது என்று ஊழியர்களை மிரட்டியதாக  ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    மற்றொரு சம்பவத்தில், ஹலால் அல்லாத இறைச்சியை விற்க மறுத்ததற்காக ஷிவமொகாவில் கோழிக்கடை உரிமையாளர் ஒருவரை பஜ்ரங் தள் உறுப்பினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கர்நாடகா ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    ஹலால் என்பது சிலரால், குறிப்பாக சில கட்சிகளால் உருவாக்கப்பட்ட கருத்து. இப்போது கர்நாடக மக்கள் இதனால் அவதிப்படுகிறார்கள். முஸ்லிம்கள் ஹலால் இறைச்சி உணவு சாப்பிட விரும்பினால், அவர்கள் சாப்பிடட்டும், 

    இந்துக்களுக்கும் அவர்கள் விரும்பியதை சாப்பிட சுதந்திரம் இருக்கட்டும். இருப்பினும், ஒரு பிரிவினர் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று மற்றவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

    அரசியல் காரணங்களுக்காக ஒற்றுமையை உடைப்பதற்காகவே இந்தப் பிரச்னைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. ஆறு மாணவிகள் ஹிஜாப் பிரச்னையை எழுப்பிய போது, ​​பெரியவர்களோ, கட்சித் தலைவர்களோ, ஏன் தடுக்கவில்லை.

    முஸ்லிம்களை திருப்திப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. நான் பிறப்பால் இந்து, ஆனால் நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் அல்ல. சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம்களை நான் மதிக்கிறேன். பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கூறும் மக்களை வெறுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே ஹலால் விவகாரம் குறித்து பேசிய மத்திய மந்திரியும், கர்நாடகா பாஜக எம்.பி.யுமான ஷோபா கரந்த்லாஜே , ஹலால் என்பது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தேவை என்றும்,  நாங்கள் (இந்துக்கள்) ஹலால் இறைச்சியை உண்ணத் தேவையில்லை என்றும் கூறினார். 

    முஸ்லிம்கள் அதை சாப்பிட்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், அதையே சாப்பிடுமாறு எங்களை வற்புறுத்துவது சரியல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஹலால் விவகாரத்தில் மக்களின் கருத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.  

    Next Story
    ×