search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்க சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்
    X
    மேற்கு வங்க சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்

    மேற்கு வங்க சட்டசபையில் திரிணாமுல்-பாஜக மோதல்: ஐந்து எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

    மோதலில் ஈடுபடுவதற்காகவே கொல்கத்தா காவல்துறையினரை சாதாரண உடையில் சட்டசபைக்கு ஆளும் கட்சி அழைத்து வந்திருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.
    கொல்கத்தா:

    பீர்பூம் கலவர விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க சட்டசபையில் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே மோதல் வெடித்தது.

    மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து விட்டதாகவும், இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சட்டசபையில் எதிர்க்கட்சியான பாஜக கோரிக்கை விடுத்தது. 

    இதற்கு ஆளும் திரிணாமுல் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.  இந்த அமளி காரணமாக சட்டசபையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.

    இதையடுத்து அவையில் அத்துமீறி நடந்து கொண்டதற்காக கூறி  எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்.எல்.ஏ.க்களை, சபாநாயகர் பிமன் பந்தோபாத்யா மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    எதிரிக்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி

    பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிரிக்கட்சித் தலைவர்  சுவேந்து , சட்டசபையின் கடைசி நாள் கூட்டத்திலாவது மேற்கு வங்க மாநில சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக கூறினார். 

    ஆனால் அரசு மறுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்  எங்கள் எம்எல்ஏக்களுடன் மோதலில் ஈடுபட கொல்கத்தா காவல்துறையினரை சாதாரண உடையில் சபைக்கு ஆளும் கட்சியினர் வரவழைத்து இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    இதை மறுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், சட்டசபையில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக நாடகம் ஆடுகிறது என்றும், சபைக்குள் நடந்த கைகலப்பில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×