search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சமையல் கியாஸ்
    X
    சமையல் கியாஸ்

    சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்வு- குடும்பத் தலைவிகள் கடும் அதிர்ச்சி

    சமையல் கியாஸ் விலை கடந்த 15 மாதங்களில் மட்டும் 257 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பிப்ரவரியில் ரூ.810, மார்ச்சில் ரூ.835, ஏப்ரலில் ரூ.840 ஆக இருந்தது.
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்தை தொட்டன. இதையடுத்து மத்திய அரசு வரி குறைப்பு செய்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10-ம், பெட்ரோல் ரூ.5-ம் குறைத்து நடவடிக்கை எடுத்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த 137 நாட்களில் உயர்த்தப்படவில்லை. சில மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசலை மேலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உதவி செய்தன.

    இந்த நிலையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வந்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயரும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலைகள் அதிரடியாக உயர்ந்தன. இதற்கான அறிவிப்பை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.917 ஆக இருந்தது. அது இன்று முதல் ரூ.50 உயர்ந்து ரூ.967 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சமையல் கியாஸ் விலை ஆயிரம் ரூபாயை நெருங்கி இருக்கிறது.

    இது குடும்பத் தலைவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வு ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அதிருப்தி எழுந்துள்ளது.

    சமையல் கியாஸ் விலை கடந்த 15 மாதங்களில் மட்டும் 257 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பிப்ரவரியில் ரூ.810, மார்ச்சில் ரூ.835, ஏப்ரலில் ரூ.840 ஆக இருந்தது.

    மே, ஜூன் மாதங்களில் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஜூலை மாதம் ரூ.850, ஆகஸ்டு மாதம் ரூ.875, செப்டம்பர் ரூ.900 ஆக சமையல் கியாஸ் விலை உயர்ந்தது. அக்டோபர் மாதம் 6-ந்தேதி சிலிண்டர் விலை ரூ.917 ஆக அதிகரிக்கப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 15 மாதங்களில் சமையல் கியாஸ் விலை ரூ.250-க்கும் மேல் உயர்ந்து விட்டது. தற்போது ஒரே நாளில் சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்ந்து இருப்பது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சமையல் கியாஸ் போலவே பெட்ரோல், டீசல் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன.

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.16 காசுக்கு விற்பனை ஆனது.

    அதேபோல டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று காலை முதல் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.19 காசுக்கு விற்பனை ஆகி வருகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. ரஷியா, உக்ரைன் போர் காரணமாக கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் ஒரு பேரல் 118 டாலராக இருந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை தவிர்ப்பதற்காக பெட்ரோலிய பொருட்கள் விலையை கணிசமாக உயர்த்தி இருக்கின்றன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் அதகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியிலும் 80 காசுகள் உயர்ந்துள்ளது. மும்பையில் சில இடங்களில் டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.107 ஆக உயர்ந்துள்ளது.

    மும்பையில் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5, பெட்ரோல் விலை ரூ.6 உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று தெரியவந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.350-க்கு விற்பனை ஆகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 2000 ரூபாயை கடந்து சென்றுள்ளது. இந்த நிலையில் குடும்ப தலைவிகள் பயன்படுத்தும் சிலிண்டரும் விலை அதிகரிக்கப்பட்டு இருப்பதால் நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×