search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதின் கட்காரி
    X
    நிதின் கட்காரி

    2020-ம் ஆண்டில் தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம்: நிதின் கட்காரி தகவல்

    நாடு முழுவதும் கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் மொத்தம் 12.82 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் சாலை விபத்துகள் மற்றும் நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் மொத்தம் 12.82 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 4.32 லட்சம் பேர் உயிரிழந்ததுடன், 12.69 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

    மாநிலங்களை ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டு தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடந்துள்ளன. அங்கு 45 ஆயிரத்து 484 விபத்துகள் நடந்திருப்பதுடன், அவற்றில் 8 ஆயிரத்து 59 பேர் இறந்துள்ளனர். 50 ஆயிரத்து 551 பேர் காயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் 969 விபத்துகளில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். 1019 பேர் காயம் அடைந்தனர்.

    இந்தியாவில் மோதலில் ஏற்படும் உயிரிழப்பை விட சாலை விபத்துகளில் அதிகம் பேர் இறப்பது வருத்தமளிக்கிறது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதில் நமது ஒட்டுமொத்த செயல்பாடு சிறப்பாக இல்லை.

    தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை அதிகரித்து வருகிறோம். நான் மந்திரியாக பதவியேற்றபோது 96 ஆயிரம் கி.மீ.யாக இருந்த நெடுஞ்சாலை தூரம், தற்போது 1.46 லட்சம் கி.மீ.க்கு மேல் அதிகரித்து விட்டது. இதில் ஏற்கனவே நாம் ஒரு உலக சாதனை படைத்து விட்டோம்.

    நாட்டின் சாலை கட்டமைப்பை 2024-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு இணையான நிலைக்கு உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
    Next Story
    ×