search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட்டுடன், ஜம்மு-காஷ்மீருக்கான துணை மானியக் கோரிக்கைகள், மானிய கோரிக்கைகள் மற்றும் கூடுதல் மானியக் கோரிக்கைகளையும் நிதி மந்திரி தாக்கல் செய்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் கடந்த ஜனவரி 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    2022- 2023-ம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்தார். கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடைபெற்றது.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இரு அவையிலும் விளக்கம் அளித்தார். இதை யடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 11-ந் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டத் தொடரின் முதல் பகுதியின்போது மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் இரு அவைகளும் ஒரே நேரத்தில் காலை 11 மணிக்கு செயல்படத் தொடங்கியது.

    மக்களவையில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதற்கான நோட்டீசை கொடுத்தன. மாணவர்கள் மீட்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் நோட்டீசில் தெரிவித்து இருந்தனர்.

    உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டதற்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இந்த பாராட்டை தெரிவித்தார்.

    உக்ரைன் போர் குறித்தும் அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டது குறித்தும் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜம்மு- காஷ்மீருக்கான (2022-23 ம் நிதியாண்டு) பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டுடன், ஜம்மு-காஷ்மீருக்கான துணை மானியக் கோரிக்கைகள், மானிய கோரிக்கைகள் மற்றும் கூடுதல் மானியக் கோரிக்கைகளையும் நிதி மந்திரி தாக்கல் செய்தார்.

    யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் தற்போது சட்டமன்றம் இல்லாததால், ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வில் முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. விலைவாசி உயர்வு, பண வீக்கம், பி.எப். வட்டி குறைப்பு மற்றும் உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சில முக்கிய மசோதாக்களையும் இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 8-ந் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

    Next Story
    ×