search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதிஷ்குமார்
    X
    நிதிஷ்குமார்

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரா?

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற தகவல் பரவி வருகிறது. இதுபற்றி நிதிஷ்குமார் பேட்டி அளித்தார்.
    பாட்னா :

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம், வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோர் முயன்று வருகிறார்கள்.

    இந்த அணியின் சார்பாக பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற தகவல் பரவி வருகிறது. இந்த அணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் டெல்லியில் நிதிஷ்குமாரை சந்தித்தார்.

    நிதிஷ்குமார் தற்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பது மட்டுமின்றி, பா.ஜனதா ஆதரவுடன்தான் முதல்-மந்திரி பதவியில் நீடித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இந்த தகவல் பரவியவுடன் நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்தார். நேற்று அளித்த பேட்டியிலும் அவர் இதை திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறியதாவது:-

    நான் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரம் இல்லாத செய்தி. இத்தகைய செய்திகள் எப்படி ஊடகங்களில் வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    என்னை நிறுத்தும் முயற்சி நடக்கிறதா என்று எனக்கு தெரியாது. இதுதொடர்பாக யாரும் என்னுடன் பேசவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்பதில் எனக்கு ஆர்வம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே சமயத்தில், பா.ஜனதாவின் மற்றொரு கூட்டணி கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ஜிதன்ராம் மஞ்சி, நிதிஷ்குமார் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார்.

    நிதிஷ்குமார், ஜனாதிபதி பதவிக்கும், பிரதமர் பதவிக்கும் பொருத்தமானவர் என்றும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×