search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் போராட்டக்காரர்கள் மீது கண்ணிர் புகை குண்டுகளை வீசிய போலீசார்
    X
    பீகாரில் போராட்டக்காரர்கள் மீது கண்ணிர் புகை குண்டுகளை வீசிய போலீசார்

    பீகாரில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு

    பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக் காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பீகார் போலீசார் விரட்டியடித்தனர்.
    பாட்னா:

    பீகாரில் ரயில்வே ஆள் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்வு எழுதியவர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    சில பகுதிகளில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. நவாடாவில், மாணவர்கள் ரயில் பாதை பராமரிப்பு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர், ரயில் நிலைய வளாகங்களை சூறையாடினர்.  ஆராவில் பகுதியில் ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதேபோல் சீதாமர்ஹி, பக்சர், முசாபர்பூர், சாப்ரா, வைஷாலி, கயா ரயில் நிலையம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பாட்னா ரயில் காவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார் மண்டல் தெரிவித்துள்ளார். 

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரயில்வே ஆள்தேர்வு வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் முயன்றபோது மாணவர்கள் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
    இதனால் போலீசார் அவர்கள் மீது லத்தி சார்ஜ் செய்தும், கண்ணிர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். மேலும் எச்சரிக்கும் விதமாக ரயில்வே காவல்துறை வானத்தை நோக்கி பல ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்த மோதலில் ஆறுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 12க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தனர்.    போராட்டம் காரணமாக பீகாரின் பல்வேறு பகுதிகளில் புறநகர் ரயில்கள் ஓடவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். 
    Next Story
    ×