
மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகரில் வசித்து வருபவர் முஸ்தபா(வயது 85). இறைச்சிக்கடை உரிமையாளர். இவரது மனைவி குர்ஷித் பேகம். இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் தனித்தனியாக தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் முஸ்தபா, தனது மனைவி குர்ஷித் பேகமுடன் தனிமையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குர்ஷித் பேகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் முஸ்தபா தனிமையில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தனக்கு ஒரு துணை தேவை என்று உணர்ந்தார். இதையடுத்து அவர் அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த பாத்திமா பேகம்(65) என்ற மூதாட்டியை சந்தித்தார். இருவரும் நன்றாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று பாத்திமா பேகமிடம், முஸ்தபா கூறினார். முதிர்ந்த வயதில் இது தேவைதானா? என்று பலரும் கிண்டல் செய்த நிலையில், முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகம் ஏற்றுக் கொண்டார். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். இவர்களது திருமணத்திற்கு முஸ்தபாவின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.