search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருவிழாவில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.
    X
    திருவிழாவில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

    ஆசியாவின் மிகப்பெரிய மலை கிராம திருவிழாவில் குவியும் பக்தர்கள்

    ஆசியாவின் மிகப் பெரிய அளவில் நடக்கும் பழங்குடியினரின் திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் தண்டகாரன்யம் காட்டில் மேடாரம் என்ற மலை கிராமம் உள்ளது.

    இந்த கிராமம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மேடாரம் திருவிழாவுக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். ஆசியாவில் மிகப்பெரிய அளவில் நடக்கும் இந்த பழமையான திருவிழாவில் ஆந்திரா, கேரளா, சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களிலிருந்தும் இந்த பகுதிக்கு 3 நாள் திருவிழாவுக்காக மலைவாழ் மக்கள் கூடுகின்றனர்.

    1000 ஆண்டுகளாக நடக்கும் இந்த திருவிழாவின் ஆதாரம் இரு பெண் தெய்வங்கள்! சமக்கா மற்றும் சரளம்மா என்ற இரு பெண்கள் (அம்மா-பெண்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசனின் கொடுமைக்கு ஏதிராக பெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர்கள். இதனால் தெய்வம் அளவுக்கு உயர்த்தப்பட்டனர்.

    இந்த இரு பெண்கள் சார்பாகத்தான் இந்த திருவிழா 3 நாட்கள் நடந்து வருகிறது.

    திருவிழாவில் பெண் தெய்வங்கள் ஓரிடத்தில் அலங்கரிக்கப்பட்டு மற்றொரு இடத்திற்கு யாத்திரை செல்லும். இரண்டு வருடம் கழித்து இறக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து யாத்திரை துவங்கும்.

    மலைவாழ் மக்கள் இந்த மூன்று நாட்களும் இங்கேயே தங்கி தரிசிக்கின்றனர். வேண்டுதல்களை நிறைவேற்ற மனமார வேண்டுகின்றனர்.

    நிறைவேறியவர்கள் வெல்லத்தை பெண் தெய்வங்களின் எடைக்கு எடை வழங்குகின்றனர். இந்த கோவிலுக்கு பிராமண அர்ச்சகரோ மந்திரங்களோ கிடையாது. அலங்காரம், வழிபாடு, புறப்பாடு அவ்வளவுதான் ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகின்றன. மது படையலும் உண்டு.

    இந்த பெண் தெய்வங்களை வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை பெண் தெய்வங்களின் யாத்திரையின்போது சில பெண்களுக்கு அம்மன் அருள் வருகிறது.

    அவர்களிடம் குழந்தை இல்லாத பெண்கள் நமஸ்கரித்து வரம் தர வேண்டுகிறார்கள். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் வேண்டி வணங்கி ஆசி பெறுகிறார்கள்.

    1998-ல் ஆண்டிலிருந்து இந்த விழாவை ஆந்திர அரசே ஏற்று நடத்துகிறது. அவர்களுக்கு தங்கும் இடவசதிகளும் செய்யப்படுகின்றன.

    2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவுக்காக ரூ.55 கோடி வரை அரசு நிதி ஒதுக்குகிறது.

    பிப்ரவரி மாதம் இறுதியில் விழா நடக்கும். ஆசியாவின் மிகப் பெரிய அளவில் நடக்கும் பழங்குடியினரின் திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ஆனால் விழாவுக்கு முன்கூட்டியே பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    கொரோனா காரணம் காட்டி திருவிழாவுக்கு தடை விதிக்க நேரிடலாம் என்பதால் முன்கூட்டியே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சம்மக்கா-சாரலம்மா தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்ய பக்தர்கள் நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் கூடி வருகின்றனர்.

    கொரோனா 3-வது அலை தெலுங்கானாவில் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் மேடாரம் கிராமத்தில் கூட்டத்தைக் கண்காணிக்கும் கடினமான பணியை முலுகு மாவட்ட சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    திருவிழா நடைபெற உள்ள மேடாரத்தில் 10 குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

    இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 50 பக்தர்கள் கொரோனா போன்ற அறிகுறிகளுடன் நோய்வாய்ப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் தற்காலிக மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கானோர் மேடாரத்திற்கு வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால், மாநிலத்தில் பெரிய அளவில் கொரோனா அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    வைரஸ் பரவாமல் தடுக்க பக்தர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



    Next Story
    ×