search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தற்கொலை
    X
    தற்கொலை

    நோயாளி மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த 80 வயது முதியவர்

    நோய் கொடுமை மற்றும் தனிமை காரணமாக மனைவியை கொன்று விட்டு முதியவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள கைனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது80).

    இவரது மனைவி லீலாமா(வயது 75). இவர்களுக்கு 6 மகன், மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் ஜோசப்பும், அவரது மனைவி லீலாம்மாவும் கைனகிரியில் தனியாக வசித்து வந்தனர்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லீலாமாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே படுக்கையில் விழுந்தார்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜோசப்புக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்களின் குழந்தைகள் பெற்றோரை தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்தனர். ஆனால் ஜோசப்பும், லீலாம்மாவும் ஊரை விட்டு வரமாட்டோம் எனக்கூறியபடி வீட்டிலேயே தங்கி விட்டனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் ஜோசப் தூக்கில் பிணமாக தொங்கினார். அக்கம் பக்கத்தினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் மனைவி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். பிணத்தின் அருகே ஒரு கடிதமும் இருந்தது.

    அந்த கடிதத்தில் நோய் கொடுமை மற்றும் தனிமை காரணமாக மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்வதாக ஜோசப் எழுதி இருந்தார். இதையடுத்து போலீசார் லீலாம்மா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்களின் மகள் மற்றும் மகன்களுக்கும் இது பற்றி தகவல் கொடுத்தனர். நோய் கொடுமை மற்றும் தனிமை காரணமாக மனைவியை கொன்று விட்டு முதியவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×