search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    உத்தரபிரதேச பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் உரையாடல்

    உத்தரபிரதேச தேர்தல் தொடர்பாக அம்மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலியில் உரையாடினார். தேர்தல் பிரசாரம் தொடர்பான யுக்திகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பொது தேர்தல் நடை பெறுகிறது.

    பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    உத்தரபிரதேசத்தில் தற்போது பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை மீண்டும் தக்க வைக்க பா.ஜனதா கட்சி முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே வேளையில் சமாஜ்வாடி கட்சி அங்கு ஆட்சியை பிடிப்பதற்கான வேலைகளை தொடங்கி உள்ளது.

    மேலும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. பா.ஜனதாவுக்கு எதிராக தங்கள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.

    பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதற்கும் பா.ஜனதா சார்பில் கடந்த வாரம் நடந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார்.

    முதல் கட்டமாக 58 தொகுதிகளில் 57 இடங்களுக்கும், 2-ம் கட்டமாக 55 தொகுதிகளில் 48 இடங்களுக்கும் வேட்பாளர் கள் பட்டியலை கடந்த 15-ந்தேதி பா.ஜனதா வெளியிட்டது.

    கோரக்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே அங்கு சென்று பிரசார பொதுக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக உத்தரபிரதேசத்தில் வருகிற 22-ந் தேதி வரை தேர்தல் பிரசாரம் மற்றும் பேரணிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது.

    இந்தநிலையில் உத்தரபிரதேச தேர்தல் தொடர்பாக அம்மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலியில் உரையாடினார். தேர்தல் பிரசாரம் தொடர்பான யுக்திகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் வாரணாசியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு பிரதமர் மோடி பங்கேற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.

    தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 23-ந் தேதிக்கு பிறகு உத்தரபிரதேசத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

    இதையும் படியுங்கள்... குற்றவாளிகளுக்கு தேர்தலில் டிக்கெட் - சமாஜ்வாதி குறித்து யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

    Next Story
    ×