search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர் சந்திப்பு
    X
    டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர் சந்திப்பு

    நீட் தேர்வில் இருந்து விலக்கு- அமித் ஷாவிடம் வலியுறுத்திய தமிழக எம்.பி.க்கள்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவது என்றும், சட்ட ரீதியாக இதை அணுகுவது என்றும் தமிழக அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழக எம்.பி.க்கள் மனு அளித்தனர். அதன்பின்னர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டனர். ஆனால், அவர்களை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்து வந்தார்.  3 முறை உள்துறை மந்திரியை சந்திக்க முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டது.

    அதன்பின்னர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவது என்றும், சட்ட ரீதியாக இதை அணுகுவது என்றும் தமிழக அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமித்ஷா அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.பாலுவை தொடர்பு கொண்ட அதிகாரிகள், ஜனவரி 17-ந் தேதி மாலை 4.30 மணிக்கு உங்களை சந்திக்க உள்துறை மந்திரி நேரம் ஒதுக்கித் தந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பாக மனு அளித்தனர். 

    இந்த சந்திப்புக்குப் பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வு விலக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மத்திய மந்திரி அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறோம். மத்திய சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தமிழக முதல்வருக்கு தீர்வை தெரிவிப்பேன் என அமித் ஷா உறுதி அளித்திருக்கிறார்.

    மேலும், தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தர அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
    Next Story
    ×