search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு காங்கிரசின் பாதயாத்திரையே காரணம்: மந்திரி சுதாகர்

    பொதுமக்களின் நலன் கருதி காங்கிரஸ் பாதயாத்திரையை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். பாதயாத்திரையை நிறுத்த அரசு தனது அதிகார பலத்தை பயன்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பொதுமக்களின் நலன் கருதி காங்கிரஸ் பாதயாத்திரையை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கண்காணித்து வருகிறோம். பாதயாத்திரையை நிறுத்த அரசு தனது அதிகார பலத்தை பயன்படுத்தவில்லை. கொரோனா பரவல் குறித்து எடுத்துக்கூறி அவர்களை சமாதானப்படுத்தினோம்.

    மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் கூறிய கருத்துகள் முன்கள பணியாளர்களை வெகுவாக பாதித்தது. பசவராஜ் பொம்மைக்கு நீர்ப்பாசனத்துறையில் மிகுந்த அனுபவம் உள்ளது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எந்த வன்முறையும் ஏற்படாமல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மிகவும் சிறப்பான முறையில் கையாண்டுள்ளார். மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. கொரோனா 3-வது அலையில் வைரஸ் பரவல் 2 நாளில் இரட்டிப்பு ஆகிறது. இந்த கொரோனா பரவலுக்கு காங்கிரசின் பாதயாத்திரையே காரணம்.

    கொரோனா பாதித்தவர்களில் 6 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். ஒரு சதவீதம் பேர் கண்காணிப்பு மையங்களில் உள்ளனர். 93 சதவீதம் பேர் வீட்டு தனிமையில் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2 லட்சம் பரிசோதனைகள் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். வரும் நாட்களில் இதை மேலும் அதிகரிப்போம். தற்போது பெங்களூருவில் தினமும் ஒரு லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மாநிலத்தில் தற்போது 265 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 9 மரபணு சோதனை ஆய்வகங்கள் இருக்கின்றன. மாவட்ட-தாலுகா ஆஸ்பத்திரிகளில் 30 சதவீத படுக்கைகள் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரி கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் இதுவரை 4.89 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3.98 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் தகுதியானவர்களில் 81½ சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×