search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேட்புமனு
    X
    வேட்புமனு

    தோற்பது உறுதி என தெரிந்தும் விடுவதில்லை... 94-வது முறையாக போட்டியிடும் ஆக்ரா தேர்தல் மன்னன்

    75 வயது நிரம்பிய ஹஸ்னுராம் அம்பேத்காரி, இந்த முறை ஆக்ரா ஊரகப்பகுதி மற்றும் கேராகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
    ஆக்ரா:

    உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 

    இந்நிலையில் ஆக்ராவைச் சேர்ந்த முன்னாள் வருவாய்த்துறை ஊழியர் ஹஸ்னுராம் அம்பேத்காரி, 94வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 1985ம் ஆண்டில் முதல் முறையாக பதேபூர்  சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட அவர், அதன்பின்னர் கிராம தலைவர், மாநில சட்டசபை, கிராம பஞ்சாயத்து, சட்ட மேலவை, மக்களவை என எந்த தேர்தலையும் விட்டு வைக்காமல் போட்டியிட்டிருக்கிறார். ஒருமுறை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கும் விண்ணப்பிக்க சென்றார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

    75 வயது நிரம்பிய ஹஸ்னுராம் அம்பேத்காரி, இந்த முறை ஆக்ரா ஊரகப்பகுதி மற்றும்  கேராகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை போட்டியிட்ட 93 தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார். இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் 100வது தேர்தல் வரை போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார். 

    இதுபற்றி ஹஸ்னுராம் அம்பேத்காரி கூறுகையில், “பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக ஒரு கட்சி கூறியதால் 1985ல் அரசு வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால், கடைசி நேரத்தில் கட்சி காலை வாரியதுடன், என்னால் ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது என கேலி செய்தார்கள். என்னால் முடியும் என்பதை அவர்களுக்கு காட்டுவதற்காக சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து, பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்டேன். அதில் நான் மூன்றாவது இடத்தை பிடித்தேன். அதன்பின்னர் தோற்றுவிடுவேன் என்று தெரிந்தும் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுகிறேன். எனது இந்த முயற்சிக்கு எனது குடும்பத்தினர் ஆதரவாக உள்ளனர்” என்றார்.
    Next Story
    ×