search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் ஒரே வாரத்தில் 6 மடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு- புதிதாக 1.80 லட்சம் பேருக்கு தொற்று

    மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 2.20 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்று ஒரேநாளில் 44,388 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா 3-வது அலை அதிவேகத்தில் பரவி வருகிறது.

    இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் பாதிப்பு 1,59,632 ஆக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு 12.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக உயர்ந்தது. மேலும் தினசரி பாதிப்பு விகிதம் 13.29 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 7.92 சதவீதம் ஆகவும் உயர்ந்துள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 7 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இதன் மூலம் ஒரே வாரத்தில் பாதிப்பு 6 மடங்கு வரை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. நாடு முழுவதும் 2-ம் அலை வேகமாக பரவிய நேரத்தில் கூட ஒரு வார பாதிப்பு 1.3 லட்சத்தில் இருந்து 7.8 லட்சத்தை தொடுவதற்கு சுமார் 5 வாரங்கள் வரை ஆகி இருந்தது. ஆனால் தற்போது ஒரே வாரத்தில் 6 மடங்கு உயர்ந்திருப்பது 3-ம் அலை மின்னல் வேகத்தில் பரவுவதை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.

    மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 2.20 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்று ஒரேநாளில் 44,388 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    3-வது அலையில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து மேற்கு வங்கம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று புதிதாக 24,287 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.05 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய வாரத்தில் 18,500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே வாரத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 6 மடங்கு உயர்ந்துள்ளது.

    டெல்லியில் புதிதாக 22,751 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு வார பாதிப்பு 10,769-ல் இருந்து 95 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    பீகாரில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. அங்கு கடந்த ஒரே வாரத்தில் 17,871 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. முந்தைய வார பாதிப்பு 1,073 ஆக இருந்த நிலையில், ஒரு வாரத்தில் பாதிப்பு சுமார் 17 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

    கோப்புப்படம்


    தமிழ்நாட்டில் 12,895, கர்நாடகாவில் 12,000, உத்தரபிரதேசத்தில் 7,680, கேரளாவில் 6,238, குஜராத்தில் 6,275, ராஜஸ்தானில் 5,660, அரியானாவில் 5,166 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 44 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 146 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,83,936 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,41,639, கேரளாவில் 49,591 பேர் அடங்குவர்.

    கொரோனா பிடியில் இருந்து நேற்று 46,569 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 172 ஆக உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,23,619 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட 1,33,008 அதிகம் ஆகும்.

    நாடு முழுவதும் நேற்று 29,60,975 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 151 கோடியே 94 லட்சத்தை கடந்துள்ளது.

    இதற்கிடையே நேற்று 13,52,717 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 69.15 கோடியாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×