search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நாடு முழுவதும் புதிதாக 33,750 பேருக்கு தொற்று- 3 மாநிலங்களில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

    கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் புதிதாக 1.3 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 வாரங்களில் இல்லாத அளவில் அதிகபட்ச பாதிப்பாக இது அமைந்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், புதிதாக 33 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,750 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 21 சதவீதம் அதிகம் ஆகும். மொத்த பாதிப்பு 3 கோடியே 49 லட்சத்து 22 ஆயிரத்து 882 ஆக உயர்ந்தது.

    நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 11,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரேநாளில் பாதிப்பு 29 சதவீதம் அதிகரித்துள்ளது. தலைநகர் மும்பையில் மட்டும் புதிதாக 8,063 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    மேற்கு வங்கத்தில் நேற்று 6,153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொல்கத்தாவில் மட்டும் 3,194 பேருக்கு தொற்று உறுதியானது. மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் சதவீதம் 15.93 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    டெல்லியில் நேற்று முன்தினம் பாதிப்பு 2,716 ஆக இருந்த நிலையில், நேற்று 17 சதவீதம் உயர்ந்து புதிதாக 3,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடகாவில் 2-வது நாளாக நேற்றும் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அங்கு புதிதாக 1,187 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் 1,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் புதிதாக 1.3 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 வாரங்களில் இல்லாத அளவில் அதிகபட்ச பாதிப்பாக இது அமைந்துள்ளது.

    முந்தைய வார பாதிப்புடன் (46 ஆயிரம்) ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் பாதிப்பு சுமார் 3 மடங்கு அதிகமாக உள்ளது.

    மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அங்கு முந்தைய வார பாதிப்புடன் ஒப்பிடுகையில் சுமார் 5 மடங்கு அதிகம் ஆகும்.

    இதேபோல மேற்கு வங்கத்திலும் ஒரு வார பாதிப்பு 5 மடங்கும், டெல்லியில் 9 மடங்கும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுதவிர பீகார், ஜார்கண்ட், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், அரியானா உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு வார பாதிப்பு அதிகரித்துள்ளது.

    அதே நேரம் கேரளாவை பொறுத்தவரை ஒரு வார பாதிப்பு, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் சரிந்துள்ளது.

    தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 78 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 123 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,81,893 ஆக உயர்ந்தது.

    நாடு முழுவதும் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 95 ஆயிரத்து 407 ஆக உயர்ந்தது. இதில் நேற்று மட்டும் 10,846 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,45,582 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 22,781 அதிகம் ஆகும்.

    இதுவரை 145 கோடியே 68 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 23,30,706 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 8,78,990 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 68.09 கோடியாக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×