search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதிஷ் குமார், தேஜஷ்வி யாதவ்
    X
    நிதிஷ் குமார், தேஜஷ்வி யாதவ்

    டபுள்-என்ஜின் அரசு என்னாச்சு?: நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக்காட்டி தேஜஷ்வி யாதவ் விமர்சனம்

    பீகாரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 51.91 சதவீத மக்கள் ‘பலபரிமாண ஏழை’ மக்கள் என நிதி ஆயோக் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
    பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளது. பா.ஜனதா அதிக இடங்களை பிடித்த நிலையிலும் நிதிஷ் குமாரை முதல்வராக ஏற்றுக்கொண்டது.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும், பிரதமர் மோடியும் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருக்க வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் மக்களை சென்றடையும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களை இரட்டை என்ஜின் கொண்ட அரசு என மோடி அடிக்கடி கூறுவது உண்டு.

    இதனால்தான் மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் சென்றடைகிறது என பா.ஜனதா கூறி வருகிறது. ஆனால், பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியிலான அரசுதான் ஆட்சி செய்து வருகிறது.

    இருந்தாலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றில் பீகார் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சமீபத்தில் நிதி ஆயோக்கின் பல-பரிணாம வறுமைக் குறியீடு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டது. அதில் பீகார் மக்கள் தொகையில் 51.91 சதவீதம் பேர் ‘பலபரிணாம ஏழை’ மக்கள் எனத் தெரிவித்திருந்தது. சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை கொண்ட இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ், இரட்டை என்ஜின் கொண்ட அரசு இதற்கு பொறுப்பேற்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மோடி, நிதிஷ் குமார்
    மோடி, நிதிஷ் குமார்

    இதுகுறித்து தேஜஷ்வி யாதவ் கூறுகையில் ‘‘நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி பீகார் மாநில மக்களின் மோசமான நிலைக்கு டபுள்-என்ஜின் அரசு பொறுப்பேற்க வேண்டும். இரட்டை என்ஜின் அரசின் முதலமைச்சர் பொறுப்பேற்கவில்லை என்றால், நீங்கள் யாரை பொறுப்பேற்க செய்வீர்கள்?. அவர்கள் இல்லை என்றால் யார் பொறுப்பேற்பது?. அவர்கள் எம்.பி. தேர்தலில் 40-க்கு 40 என வெற்றி பெற்றார்கள். இது டபுள்-என்ஜின் அரசு என்கிறார்கள். அப்படி என்றால், அவர்கள் பொறுப்பு ஏற்க வில்லை என்றால், யார் பதில் அளிப்பது?.

    பீகார் மக்கள் ஏற்கனவே உணவு, வறட்சி, பணவீக்கத்தால் விலைவாசி உயர்வு ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள். நிதிஷ் குமார் அரசு வாக்குறுதி அளித்ததுபோல், 19 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதை வழங்கும்படி நான் கூறவில்லை. ஆனால், ஒரு வருடத்திலாவது இதை கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நினைவில் கொள்ளுங்கள்’’ என்றார்.
    Next Story
    ×