search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரத்பவார்
    X
    சரத்பவார்

    மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்க தயாராக இருக்கவில்லை: மனம் திறந்த சரத்பவார்

    ஆரம்பத்தில் எனக்கு முதல்-மந்திரி பொறுப்பேற்க ஆர்வமில்லை. டெல்லிக்கு திரும்பி செல்ல தான் விரும்பினேன். அதன்பிறகு முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டேன் என சரத்பவார் கூறியுள்ளார்.
    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புனேயில் நடந்த தனியார் மராத்தி பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1993-ம் ஆண்டு நான் காங்கிரசில் இருந்த போது, பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்தேன்.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட (1992 டிசம்பர்) பிறகு மும்பையில் கலவரம் வெடித்தது. மும்பையில் 14 முதல் 15 நாட்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அப்போது மத்திய ராணுவ மந்திரியாக இருந்த என்னை, மராட்டியத்திற்கு திரும்பி மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்க கூறினார்கள். இதற்காக நான் பிரதமர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். அப்போது என்னை மாநில அரசுக்கு திரும்புமாறு கூறினார்கள். ஆனால் நான் அதற்கு தயாராக இல்லை. 6 மணி நேரத்திற்கு மேலாக என்னை வலியுறுத்தி கொண்டே இருந்தார்கள்.

    ஒரு கட்டத்தில், “நீங்கள் பிறந்து, வளர்ந்து உங்களை டெல்லி வரை கொண்டு வந்த மாநிலம் எரிந்து கொண்டு இருக்கிறது. இப்போது நீங்கள் அந்த பொறுப்பை ஏற்காவிட்டால் இது அவர்களை கவலைப்படுத்தும்” என்று என்னிடம் கூறினார்கள். இதுபோன்ற சூழலில் தான் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுபேற்றேன். ஆரம்பத்தில் எனக்கு முதல்-மந்திரி பொறுப்பேற்க ஆர்வமில்லை. டெல்லிக்கு திரும்பி செல்ல தான் விரும்பினேன். அதன்பிறகு முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சரத்பவார் காங்கிரசில் இருந்து விலகி 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×