search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள ஐகோர்ட்
    X
    கேரள ஐகோர்ட்

    ஒமைக்ரானால் ஏற்பட்ட தடங்கல்... ஆன்லைனில் திருமணம் செய்ய அனுமதி அளித்தது ஐகோர்ட்

    திருமண தேதி, நேரம் மற்றும் திருமணம் செய்வதற்கு பயன்படுத்த வேண்டிய ஆன்லைன் தளத்தை திருமணப்பதிவு அதிகாரி நிர்ணயித்து தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
    கொச்சி:

    ஒமைக்ரான் பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் மணமகன் இந்தியாவிற்கு வர முடியாத நிலையில் திருமணத்தை ஆன்லைன் வாயிலாக நடத்திக்கொள்ள கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ரின்டு தாமஸ் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஹரிகுமரன் நாயர் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். டிசம்பர் 23ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அவர்களின் திருமணத்திற்கு ஒமைக்ரான் வடிவத்தில் தடங்கல் ஏற்பட்டது. 

    அதாவது, மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்றிருந்த மணமகன் ஹரிகுமரன் நாயர், அங்கிருந்து டிசம்பர் 22ம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டு, அதற்காக விமான பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்தார். ஆனால் உலக அளவில் ஒமைக்ரான் பரவத் தொடங்கியதால், கட்டுப்பாடுகள் காரணமாக, அவரால் விமான பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால், மணமகள் ரின்டு தாமஸ் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஒமைக்ரான் பரவல் காரணமாக, தனது திருமணத்திற்கு ஏற்பட்ட தடையை  விளக்கிச் சொல்லி, தான் ஆன்லைனில் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இந்த திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அனுமதி கோரியிருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதி நாகரேஷ், கொரோனா பேரிடர் காரணமாக, மணமக்களில் ஒருவர் திருமணப்பதிவு அதிகாரி முன் நேரில் ஆஜராக முடியாதபோது,  அவர்களின் திருமணத்தை ஆன்லைனில் நடத்தலாம் என அனுமதி அளித்தார். 

    திருமண சாட்சிகள் அதிகாரியின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறிய நீதிபதி, ஆன்லைனில் இருக்கும் தரப்பினரின் அடையாளத்தை உறுதி செய்யவேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆன்லைன் முறையில் திருமணத்தை பதிவு செய்யுமாறு திருமணப்பதிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    திருமண தேதி மற்றும் நேரத்தையும், பயன்படுத்த வேண்டிய ஆன்லைன் தளத்தையும் திருமணப்பதிவு அதிகாரி நிர்ணயித்து, அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
    Next Story
    ×