search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன்
    X
    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன்

    மாநிலங்களவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட்

    தேர்தல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சினை எழுப்பி அந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். 

    ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.  

    அதேசமயம்  12 எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தால் முடிவை மறுபரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க முடியாது  என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.

    இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டெரெக் ஓ பிரையன், பாராளுமன்ற மாநிலங்களவை நடப்பு கூட்டத் தொடரின் மீதமுள்ள நாட்கள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த போது பாராளுமன்ற விதிமுறை புத்தகத்தை நாற்காலியில் வீசியதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென்னும் ஒருவர். தற்போது அந்த கட்சியின் மற்றொரு எம்.பி.யான டெரெக் ஓ பிரையன் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெரெக் ஓ பிரையன் , கடந்த முறை நான் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது மத்திய அரசு விவசாயச் சட்டங்களை அமல் செய்ய முயன்றது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்று தேர்தல் சட்ட மசோதா 2021 ஐ அமல்படுத்த பா.ஜ.க. அரசு முயலுகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். இந்த மசோதாவும் விரைவில் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
    Next Story
    ×