search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- இலங்கையுடன் மீண்டும் பேச மத்திய அரசு முடிவு

    தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, மீனவ பிரதிநிதிகளின் பட்டியலை தருமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா- இலங்கை இடையே தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

    பாக்ஜல சந்தியில் தாங்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் மீன் வளம் அதிகமாக உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்கி சிறை பிடித்து வருகின்றனர். மீன் பிடி படகுகள் மற்றும் வலைகளையும் அவர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் இருந்து சென்ற மீனவர்களில் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

    இந்த சம்பவங்களை கண்டித்து ராமேசுவரம் மற்றும் ஜகதாபட்டினத்தில் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த 2016-ம் ஆண்டு தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் மீனவ பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா-இலங்கை ஒருங்கிணைப்புக்குழு கூட்டமும் நடந்தது.

    ஆனால் இரு நாட்டு மீனவர்கள் சந்தித்து பேசியும் எந்த ஒருமித்த கருத்தும் ஏற்படவில்லை. இதுவரை இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. என்றாலும் இலங்கையில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இன்னும் நடந்து கொண்டுதான் வருகிறது.

    தற்போது 69 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையிடம் மீண்டும் பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி தமிழக மீனவ பிரதிநிதிகளின் பட்டியலை தருமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

    மத்திய அரசிடம் இருந்து இப்படி ஒரு தகவல் வந்து இருப்பதை தமிழக அரசு உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளபடி விரைவில் தமிழக மீனவ பிரதிநிதிகள் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு

    தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே கடந்த ஆண்டுகளில் நடந்த தொடர் பேச்சுவார்த்தை காரணமாக சுமூக நிலை ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட இடைவெளியால் மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருதரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி உள்ளது. விரைவில் இந்த பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாக்ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால்தான் இலங்கை கடற்படையுடன் மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதை தவிர்க்க தமிழக மீனவர்களை ஆழ்கடல் பகுதிக்கு செல்லுமாறு அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

    இதற்காக அதிநவீன எந்திர படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் வெற்றி கிடைத்தால் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வழி ஏற்படலாம்.


    Next Story
    ×