search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற மக்களவையில் தேர்தல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய சட்டத்துறை மந்திரி  கிரண் ரிஜிஜூ
    X
    பாராளுமன்ற மக்களவையில் தேர்தல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ

    தேர்தல் சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்

    பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பின
    புதுடெல்லி:

    வாக்காளர் பட்டியலில் விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தேர்தல் சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது:

    ஏற்கனவே வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்திருந்தாலும் அவா்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், வெவ்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளா் பட்டியலில் அல்லது அதே தொகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே ஆதார் எண்ணை அதிகாரிகள் கேட்க முடியும். 

    ஆதார் எண்ணைத் தர இயலாத நிலையில் இருப்பவா்களை வாக்காளா்களாக சோ்த்துக் கொள்ள மறுப்பு தெரிவிக்காது. ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருப்பவா்களின் பெயரையும் நீக்க இந்த மசோதா அனுமதிக்காது. ஆதார் எண்ணை தர இயலாதவர்கள் அடையாள சான்றாக வேறு ஏதேனும் ஓா் ஆவணத்தைச் சமா்ப்பிக்கலாம்.

    தற்போதைய நடைமுறையின்படி ஜனவரி 1-ம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை அடைந்தவர்கள் மட்டுமே புதிய வாக்காளா்களாக பதிவு செய்யலாம். அதன் பிறகு 18 வயதை அடைந்தால், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த புதிய மசோதாவில்  ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளைத் தகுதி நாட்களாக கொண்டு வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளர்கள் இணையும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 14-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

    தற்போதைய தேர்தல் சட்ட விதிகளின்படி பள்ளிகளில் மட்டுமே வாக்குச்சாவடிகளை அமைக்க முடியும். இனி கூடுதலாக தேர்தல் ஆணையம் விரும்பும் பொது இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொள்ள அதிகாரம் வழங்கும் வகையில் புதிய மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.   

    மேலும் ராணுவத்தில் பணியாற்றும் பெண், வாக்குப்பதிவின்போது  ஊரில் இல்லாவிட்டால் அவருக்கு பதில் அவரது கணவர் வாக்களிக்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப் பிரிவில் ‘மனைவி’ என்ற வார்த்தைக்கு பதில் வாழ்க்கை துணைவா் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.

    மக்களவையில் அவை தலைவரை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

    தேர்தல் சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் எழுந்து நின்று அவர்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த மசோதா இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும், ஆதார் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். புதிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.  எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது.  கடும் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    Next Story
    ×