search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    4 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ ஒப்பந்தம்

    நான்கு நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதன் மூலம் 1140 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுக்கு இடையேயான காலக்கட்டங்களில்  4 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம் செய்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதற்காக 6 ஒப்பந்தங்களில் இஸ்ரோ கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘2021 – 2023 வரையிலான காலக்கட்டங்களில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 4 நாடுகளுடன் 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம்  132 மில்லியன் யூரோ வருமானம் (இந்திய மதிப்பில் ரூ. 1140 கோடி) இந்திய அரசுக்கு கிடைக்கும்.

    இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பி வருகிறது.  1999-ம் ஆண்டு முதல் இன்றுவரை 34 நாடுகளின் 342 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வணிக ரீதியில் ஏவப்பட்டுள்ளன. மாணவர்கள் தயாரித்த 12 செயற்கைக்கோள்கள் உள்பட 124 உள்நாட்டு செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

    இந்திய ராக்கெட்டுகள் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதன் மூலம், 2019- 2021 வரையிலான 3 ஆண்டுகளில் இந்திய அரசு, அந்நிய செலாவணியாக 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோவை வருமானமாக பெற்றுள்ளது.

    இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ள வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் புவி கண்காணிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்காக பயன்பட்டு வருகின்றன என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×