search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலாவுக்கு எதிரான வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

    சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளுக்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகளுக்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக கர்நாடக ஊழல் தடுப்பு போலீசார் சசிகலா மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கில் போலீசார் தீவிரமான முறையில் விசாரணையை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவ்வப்போது ஊழல் தடுப்பு படை போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இந்த பொதுநல மனு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் துறை செயலாளர் சார்பில் வக்கீல், குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு போலீஸ் துறை மந்திரியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 வாரங்கள் காலஅவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஒருவேளை 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், போலீஸ் துறை செயலாளர் (உள்துறை செயலாளர்) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×