search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முல்லை பெரியாறு அணை
    X
    முல்லை பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்துவிடுவது கண்காணிப்பு குழு அதிகாரத்துக்கு உட்பட்டது - சுப்ரீம் கோர்ட்

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்து விடுவது தொடர்பாக இனி இதுபோன்ற இடைக்கால மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரி ஜோ ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    மேலும் கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான முல்லைப்பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கொச்சியை சேர்ந்த அறக்கட்டளை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த 2 மக்களை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையின்போது, ‘இதுபோன்ற மனுக்கள் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் எனவே, பாதுகாப்பு தொடர்பான பிரதான வழக்கை விசாரிக்க வேண்டும். மழைப்பொழிவும் தற்போது இல்லை’ என தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்தே வாதிட்டார்.

    அப்போது கேரள அரசு சார்பில் வாதிட்ட வக்கீல், ஜெய்தீப் குப்தா, ‘உரிய அறிவிப்பு இன்றி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகம் நீரை திறந்து விடுகிறது, எனவே 24 மணி நேரத்திற்கு முன்பாக அறிவிப்பு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எப்போது நீரை திறந்துவிட வேண்டும் என்பது கண்காணிப்பு குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே நீரை திறந்துவிடுவது தொடர்பான புகார்களை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கூறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்

    மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்து விடுவது தொடர்பாக இனி இதுபோன்ற இடைக்கால மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது, இந்த விவகாரத்தில் இரு மாநிலத்துக்கும் அரசியல் நெருக்கடிகள் வெளியில் இருக்கலாம். ஆனால் அதை கோர்ட்டில் காட்டக்கூடாது’ என்று இரு மாநில அரசுகளையும் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான பிரதான வழக்கு ஜனவரி 11-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×