search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி
    X
    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி

    மத்திய அமைச்சர் ராஜினாமா செய்யும்வரை, அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்: ராகுல் காந்தி கருத்து

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட  சிறப்பு விசாரணைக் குழு, அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிவித்திருந்தது. அந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

    பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது :

    லக்கிம்பூர் கலவரத்தில் மத்திய அமைச்சருக்கு தொடர்பு இருப்பதால் இது குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. 

    லக்கிம்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். சபை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளேன். மத்திய அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த கலவரம் திட்டமிட்ட சதி என்று முன்பே பேசப்பட்டது. அது தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த சதியில் தொடர்புடையவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  

    நாங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்க கோருகிறோம். ஆனால் பிரதமர் நிராகரிக்கிறார். நாங்கள் இந்த அரசுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ அதை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைச்சர் பதவி விலகுவதை நாங்கள் உறுதி செய்வோம். அனைவரும் கொடுத்த அழுத்தம் காரணமாக வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது. இவ்வாறு தமது பேட்டியின் போது ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற மாநிலங்களவை

    இதனிடையே 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மாநிலங்களவை பணிகள் பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் அமளி  நீடித்ததால், நாளை காலை 11 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் பாராளுமன்ற மக்களவையில் லக்கிம்பூர் கலவர விவகாரம் மற்றும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. பிற்பகலுக்கு பிறகு அமளி நீடித்ததால் மக்களவையும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
    Next Story
    ×