search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    55 சதவீதத்தினருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி - மத்திய சுகாதார மந்திரி தகவல்

    இந்தியாவில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு விரட்டியடிக்க கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதலில் இந்த திட்டம், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் தடுப்பூசி திட்டம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    நேற்று காலை 7 மணி நிலவரப்படி, இந்த 12 மாத காலத்தில் நாட்டில் 133 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 577 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 81 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரத்து 502 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 52 கோடியே 13 லட்சத்து 58 ஆயிரத்து 75 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்தியாவில் தகுதி வாய்ந்தோரில் (18 வயதானவர்கள்) 55.52 சதவீததத்தினருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

    இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.அதில் அவர், “தற்போது 55 சதவீதத்துக்கும் அதிகமான தகுதி வாய்ந்த மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றொரு மைல்கல்லை அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் வீடு தோறும் தடுப்பூசி திட்டம், கொரோனாவுக்கு எதிரான நாட்டின் கூட்டுப்போரில் கூடுதல் பலம் சேர்த்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 66 லட்சத்து 98 ஆயிரத்து 601 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் முதல் டோஸ் தடுப்பூசி 18 லட்சத்து 78 ஆயிரத்து 760 பேருக்கு போடப்பட்டுள்ளது. 48 லட்சத்து 19 ஆயிரத்து 841 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×