search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சர் சுனில் குமார்
    X
    கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சர் சுனில் குமார்

    லவ் ஜிகாத் தடைச் சட்ட மசோதா கொண்டு வர கர்நாடகா அரசு முடிவு

    கர்நாடகாவில் ஏழைகளை குறிவைத்து பெரிய அளவில் மத மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று மாநில எரிசக்தி துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
    பெலகாவி:

    கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், மாநில எரிசக்தி துறை அமைச்சர் சுனில் குமார் பெலகாவி நகரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

    நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம், பாஜக ஆட்சியில் பசுவதை தடுப்பு மற்றும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவது உறுதி என்று.  நான் ஒரு படி மேலே சென்று கூறுகிறேன், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் சட்டம் கொண்டு வருவோம்.

    கர்நாடகாவில் சில அமைப்புகள் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை என்று பகிரங்கமாகக் கூறுகின்றன. மத மாற்றம் அவர்களின் நோக்கமல்ல என்றால், மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்ப்பது  ஏன்? ஒரு புறம் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை என்கிறார்கள்.  மறுபுறம் அவர்கள் மசோதாவை எதிர்க்கிறார்கள். அவர்களே தெளிவற்ற நிலையில் இருக்கிறார்கள். நாங்கள் அல்ல. 

    கர்நாடக சட்டப்பேரவை

    கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடுப்பு மசோதாவை தாக்கல் செய்ய பா.ஜ.க. அரசு தயாராகி வருகிறது.

    லவ் ஜிகாத்தை தடை செய்ய உத்தரபிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு கர்நாடக அதிகாரிகளுக்கு அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவில் ஏழைகளை குறிவைத்து பெரிய அளவில் மத மாற்றங்கள் நடைபெறுகின்றன. தூண்டுதல்கள் மூலம் நடைபெறும் இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று கருதப்பட்டது.

    எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ அல்லது சமூகத்தையோ அரசு குறி வைக்கவில்லை. அனைத்து சமூகத்தையும்  மனதில் வைத்தே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.

    இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை காங்கிரஸ்தான் விளக்க வேண்டும். நாங்கள் அவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறோம்.  

    இவ்வாறு அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×