search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசி விஸ்வநாதர் கோவில்
    X
    காசி விஸ்வநாதர் கோவில்

    காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் நாளை திறப்பு -விழாக்கோலம் பூண்டது வாரணாசி

    இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளை கவரும் வகையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வாராணாசி நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    வாரணாசி: 

    கோடிக்கணக்கான இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக காசி விஸ்வநாதர் கோவில் திகழ்கிறது. இங்கு ஓடும் கங்கை ஆற்றில் நீராடிய பின்னர், காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் பாவங்கள் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

    இந்நிலையில் வாரணாசி தொகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடு, மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில் காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  மொத்தம் 5.50 லட்சம் சதுர அடியில் இந்த பணிகள் நடைபெற்றுள்ளன. இதில் 70 சதவீதம் பசுமை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.  

    கோவில் வளாகத்தில் பாதுகாப்பு

    இந்த திட்டத்தின்படி காசி விஸ்வநாதர் கோவிலை கங்கை கரையுடன் நேரடியாக இணைக்கும் வகையில் 320  மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகம், நூலகம், பல்நோக்கு அரங்குகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள், பக்தர்கள் பயன்பாட்டிற்கு இவற்றை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

    மின்னொளியில் ஜொலிக்கும் காசி விஸ்வநாதர் கோவில்

    மேம்பாட்டு பணிகளுக்காக கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.  அப்போது அந்த பகுதியில்  40 கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோவில்கள் முன்பு பக்தர்களுக்கு தெரியாமல் மறைந்திருந்தன.  தற்போது அவை  புனரமைப்புக்கு பின் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படும் என்று வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் காசி நகரம் மேலும் வளர்ச்சி அடையும் என்றும், கடைக்காரர்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் இதனால் பயன்அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


    காசி நகரமே தற்போது விழாக் கோலம் பூண்டுள்ளது. கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சன்னதிக்கு செல்லும் தெருக்களில் அமைந்துள்ள கட்டிடங்களின் முகப்புகள்  இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளன, மேலும் பல கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த விழாவைக் கொண்டாடும் வகையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. கோவிலுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    காசி விஸ்வநாதர் கோயில் மேம்பாட்டு திட்ட திறப்பு விழாவில் அனைத்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.  நாடு முழுவதும் 51,000 க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இந்த விழா நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வாரணாசியில் ஒரு மாதம் கலாச்சாரப் பயிற்சியும் நடைபெறுகிறது.
    Next Story
    ×