search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சொந்த ஊர்களுக்கு டிராக்டர்களில் செல்லும் விவசாயிகள்
    X
    சொந்த ஊர்களுக்கு டிராக்டர்களில் செல்லும் விவசாயிகள்

    டெல்லி போராட்டக் களங்களை காலி செய்து வீட்டிற்கு திரும்பிய விவசாயிகள்

    புதுடெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மூன்று மாநில விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த  மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் ஹாஜிபூர் எல்லைகளை முற்றுகையிட்டு ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த போராட்டம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

    விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயாராக இருந்தது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என விவசாயிகள் கண்டிப்புடன் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    போராட்டக் களத்தை காலி செய்து பொருட்களுடன் புறப்பட்ட விவசாயிகள்

    இதனால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த 29-ந்தேதி பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

    என்றாலும், குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) குறித்து உறுதியளிக்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்களத்தில் இருந்த விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கங்களுடன் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் பெற்றதை அடுத்து, போராட்டத்தை விவசாய சங்கங்கள் கைவிட்டன. ஏற்கனவே அறிவித்தபடி டெல்லி எல்லைப்பகுதியில் இருந்து இன்று அவர்கள் வெளியேறினர். 

    போராட்டக்களத்தில் இருந்த கூடாரங்களை அகற்றிய விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


    அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி மீண்டும் ஒன்று கூடி சந்திக்க உள்ளதாகவும் அப்போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என விவசாய சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, டெல்லியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் வந்த டிராக்டர் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதியது.  ஹரியானா மாநிலம் ஹிசர் பகுதியில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
    Next Story
    ×