search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிபின் ராவத்தின் சிதைக்கு தீ மூட்டிய மகள்
    X
    பிபின் ராவத்தின் சிதைக்கு தீ மூட்டிய மகள்

    பிபின் ராவத், மனைவி உடல்கள் தகனம்... 17 குண்டுகள் முழங்க முப்படையினர் இறுதி மரியாதை

    பிபின் ராவத்-மதுலிகா தம்பதியினரின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி கலந்து கொண்டு பெற்றோரின் உடல்களுக்கு மலர் தூவி இறுதி சடங்கு செய்தனர்.
    புதுடெல்லி:

    குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள் இன்று பிற்பகல் டெல்லி காமராஜ் சாலை உள்ள இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறும், பிபின் ராவத் புடைப்படம் இடம்பெற்ற பதாகைகளை எடுத்துக் கொண்டும் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தனர்.

    ஊர்வலம் கண்டோன்மென்டை அடைந்ததும், அங்குள்ள ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா உடல்கள் இருந்த பெட்டிகள் வைக்கப்பட்டன.  

    ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்திய காட்சி

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி, பிரான்ஸ், பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முப்படை தளபதிகள் மற்றும் இலங்கை, பூடான், நேபாளம், வங்காளதேசம் உள்பட அண்டை நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து, இறுதி மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் பிபின் ராவத்-மதுலிகா தம்பதியினரின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி கலந்து கொண்டு பெற்றோரின் உடல்களுக்கு மலர் தூவி இறுதிச் சடங்கு செய்தனர்.  நிகழ்ச்சியில் பிபின் ராவத் உறவினர்களும் பங்கேற்றனர்.

    மூவர்ணக் கொடியை அகற்றிய ராணுவத்தினர்

    தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா உடல்கள் இருந்த பெட்டிகளை தோளில் சுமந்து சென்ற முப்படை  வீரர்கள் தகன மேடை அருகே வைத்தனர். பின்னர் பிபின் ராவத் உடலில் போர்த்தப்படடிருந்த மூவர்ண தேசிய கொடியை ராணுவத்தினர் முறைப்படி அகற்றினர். தொடர்ந்து அங்கு இருந்த சிமெண்ட் பூசப்பட்ட தகனக்குழிக்குள் இரு உடல்களும் வைக்கப்பட்டன. அப்போது நடைபெற்ற இறுதி சடங்கில் குடும்பத்தினர் பங்கேற்றனர்.  

    குண்டுகள் முழங்க மரியாதை

    பின்னர் கூர்க்கா துப்பாக்கிப் படையினர் 17 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத்துக்கு முழு ராணுவ மரியாதை அளித்தனர். தொடர்ந்து மரகட்டைகள் அடுக்கப்பட்டு பிபின் ராவத்-மதுலிகா உடல்கள் தகனம் செய்யப்பட்டன. சிதைக்கு அவர்களின் மகள் தீ மூட்டினார். 
    Next Story
    ×