search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டபோது எடுத்த படம்.
    X
    தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டபோது எடுத்த படம்.

    அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு: பிரியங்கா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி

    உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதைப்போல போலீஸ் துறையில் 25 சதவீதம் பெண்களுக்கு பணி வழங்கப்படும்.
    லக்னோ :

    உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது.

    பெண்களை முக்கியமாக வைத்து இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்க உள்ளது. அந்தவகையில், பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வந்தார்.

    இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தனியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை பிரியங்கா நேற்று வெளியிட்டார்.

    ‘சக்தி விதான்’ என அழைக்கப்படும் அந்த அறிக்கையில் உள்ள விவரங்களை பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு கட்சி, பெண்களை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இன்றைய பெண்கள் தங்களுக்காக போராட விரும்புகிறார்கள். அந்த உணர்வை மனதில் வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்படடு உள்ளது.

    பெண்களுக்கான தேர்தல் அறிக்கை சுய மரியாதை, தற்சார்பு, கல்வி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என 6 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

    மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதைப்போல போலீஸ் துறையில் 25 சதவீதம் பெண்களுக்கு பணி வழங்கப்படும்.

    தேர்தலில் போட்டியிட 40 சதவீத டிக்கெட் பெண்களுக்கு வழங்கப்படும் என நாங்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தோம். தற்போது இதை 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம். இதன் மூலம் அரசியலில் பாலின சமத்துவமின்மையை நாங்கள் நீக்க உள்ளோம்.

    50 சதவீதம் வரை பெண்களை வேலைக்கு அமர்த்தும் வணிக நிறுவனங்களுக்கு வரி விலக்கு மற்றும் உதவி வழங்கப்படும். பெண் தொழில்முனைவோருக்கு கடன், வரிச்சலுகை போன்றவை வழங்கப்படும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 50 சதவீத ரேஷன் கடைகள் பெண்களைக்கொண்டு நடத்துதல் போன்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள், பட்டதாரி பெண்களுக்கு இருசக்கர வாகனம், பெண்களுக்காக 75 திறன் மேம்பாட்டு பள்ளிகள், பெண்களே நடத்தும் மாலை நேர கல்வி மையம் போன்ற திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.
    Next Story
    ×