search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிளாஸ்டிக் கழிவுகள்
    X
    பிளாஸ்டிக் கழிவுகள்

    நாட்டில் 5 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த பிளாஸ்டிக் கழிவுகள்- மத்திய அரசு தகவல்

    பயோ மெடிக்கல் கழிவுகளை அறிவியல்பூர்வமற்ற அல்லது சட்டவிரோதமாக அப்புறப்படுத்துவது குறித்து தமிழகத்தில் இருந்து 3 புகார்கள் பெறப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி அஷ்வினி சவுபே தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி அஷ்வினி சவுபே பதிலளித்தார். பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம், கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 21.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

    2019-20 ஆம் ஆண்டில் 34 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளும், 2018-19 ஆம் ஆண்டில் 30.59 லட்சம் டன்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2015-16 ஆம் ஆண்டில் 15.89 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பயோ மெடிக்கல் கழிவுகள் குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மந்திரி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தினமும் 677 டன் பயோ மெடிக்கல் கழிவுகளை உருவாக்கியதாகவும், 2019இல் ஒரு நாளைக்கு 619 டன்  சேர்ந்ததாகவும் கூறினார். 2015 ஆம் ஆண்டில், இந்த கழிவுகள் ஒரு நாளைக்கு 502 டன்கள் என்ற அளவில் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

    நாடு முழுவதும் பயோ மெடிக்கல் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற அல்லது சட்டவிரோதமாக அப்புறப்படுத்துவது குறித்து பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த மந்திரி அஷ்வினி சவுபே,  மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 2016 முதல் 2021ம் ஆண்டு வரை மொத்தம் 23 பொது புகார்களைப் பெற்றுள்ளது என்றார். ராஜஸ்தானில் இருந்து 5, டெல்லியில் இருந்து 4, தமிழகத்தில் இருந்து 3, ஜார்க்கண்டிலிருந்து 2 மற்றும் பீகார், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு புகார் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×