search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    இந்தியாவில் ஒமைக்ரான் அலை ஏற்படுமா?- 6 முதல் 8 வாரங்களில் தெரியும்

    இந்தியாவில் ஒமைக்ரான் அலை ஏற்படுமா? என்பது தொடர்பாக மும்பையை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    கொரோனா வைரசின் உருமாற்றமான ஒமைக்ரான் தற்போது உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளது.

    இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேரையும், குஜராத், மராட்டியம், டெல்லியை சேர்ந்த ஒருவரையும் தாக்கியுள்ளது. இவர்கள் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, டான்சானியா நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். ஒருவர் மட்டும் வெளிநாட்டு பயணத்துடன் தொடர்பு இல்லாதவர் ஆவார்.

    இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் அலை ஏற்படுமா? என்பது தொடர்பாக மும்பையை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஒமைக்ரான் அலை இந்தியாவை பாதிக்குமா? என்பது 6 முதல் 8 வாரங்களுக்குள் தெரியும் என்று மராட்டிய மாநில கொரோனா தடுப்பு குழுவின் உறுப்பினரான டாக்டர் ‌ஷசாங் ஜோஷி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா பரிசோதனை

     

    தற்போது ஒமைக்ரான் மாறுபாட்ட வைரஸ் மிகவும் அதிகமாக அறியப்படாதவையாக உள்ளன. நாம் பீதி அடையக்கூடாது. ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    டெல்டா மாறுபாடு காரணமாக இந்தியாவில் 2-வது அலை ஏற்பட்டது. ஒமைக்ரான் அடுத்த சில வாரங்களில் டெல்டா மாறுபாட்டை விட புழக்கத்தில் மேலாதிக்கம் பெற்ற மாறுபாடாக மாறுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    டெல்டா மாறுபாட்டின் பரவலான வெளிபாட்டை இந்தியாவில் பார்த்தோம். அதுபோன்று ஒமைக்ரான் மாறுபாடு அலையாக மாறுமா? என்பது அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் தெளிவாக தெரிந்து விடும். இந்த 8 வாரங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

    பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்பு பயணம் தொடர்பானது. தென் ஆப்பிரிக்காவை தவிர மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களின் பாதிப்பு தன்மை குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

    அவை முதல் பயணம் தொடர்பான பாதிப்புக்கு பிறகு உருவாகி இருக்கலாம். இது எங்களை தயார் படுத்த உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா தடுப்பு குழுவில் உறுப்பினராக இருக்கும் மற்றொரு டாக்டரான ராகுல் பண்டிட் கூறும் போது, “எங்கிருந்து பாதிப்பு ஏற்பட்டது என்பது கண்டறிவது முக்கியம். சோதனை, சிகிச்சை முறைகளுக்கு மீண்டும் நாம் திரும்ப வேண்டும்.

    நாம் முன்பு பார்த்தது போல் ஒமைக்ரான் வைரசால் அதிகமான பாதிப்பு ஏற்படுமா? என்பது தெரிவதற்கு ஒரு மாதம் அல்லது 2 மாதம் ஆகும் என்றார்.

    மராட்டிய மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பிரதிப் வியாஸ் கூறும் போது, “தடுப்பூசி பணியை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்துவோம். மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்வோம். குறிப்பாக முகக்கவசம் அணிவதை கண்காணிப்போம்” என்றார்.

    மும்பை மாநகராட்சியின் கூடுதல் கமி‌ஷனர் சுரேஷ் ககானி கூறும் போது, “மும்பையில் தற்போது யாரும் பீதி அடைய வேண்டாம். கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கையாள தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது” என்றார்.

    மும்பையை அடுத்த கல்யாண் டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் தான் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியின் கமி‌ஷனர் டாக்டர் விஜய் சூரியவன்ஷி கூறும் போது “மக்கள் சமூக இடைவெளியுடனும், வீட்டுக்குள்ளேயும் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

    ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகளில் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறும்- வி.பி.துரைசாமி

    Next Story
    ×