search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன்- பெங்களூரு டாக்டர் சொல்கிறார்

    ஒமைக்ரான் வைரசை எதிர்த்து போராடுவதற்கு தடுப்பூசியே சிறந்த அளவு கோல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 20-ந் தேதி பெங்களூரு திரும்பிய 66 வயது நபருக்கும், பெங்களூரை சேர்ந்த 46 வயதான டாக்டருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நபர் பெங்களூருவில் உள்ள ஷாங்கிரிலா நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் கடந்த 27-ந் தேதி அவர் துபாய் சென்று விட்டார்.

    மற்றொரு நோயாளியான பெங்களூரு டாக்டர் கடந்த 2 மாதங்களாக வெளி மாநிலம், வெளி நாட்டுக்கு செல்லவில்லை. அவருக்கு யார் மூலமாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    டாக்டருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த 5 பேரும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பதை கண்டறிய அவர்களது ரத்தமாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த இரு நோயாளிகளிடமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த 500 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. முடிவுகள் வெளிவராத நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர், தான் முற்றிலும் நலமுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு கடுமையான உடல்வலி இருக்கிறது. குளிர் மற்றும் லேசான காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஆனால் என்னால் சுவாசிப்பதில் எந்த சிரமும் இல்லை. ஆக்சிஜன் அளவு சாதாரணமாகவே இருக்கிறது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். இந்த வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. அதே நேரத்தில் எனது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல அவருக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் லேசான காய்ச்சல்தான் இருப்பதாக அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் ஒமைக்ரான் வைரசை எதிர்த்து போராடுவதற்கு தடுப்பூசியே சிறந்த அளவு கோல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    பாதிக்கப்பட்ட நாடுகள் தடுப்பூசியை முழுமையாக செலுத்துமாறும் உலக சுகாதார அமைப்பு கேட்டு உள்ளது. மேலும் எல்லைக் கட்டுப்பாட்டை வரையறுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

    Next Story
    ×