search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புயல் மையம்கொண்டுள்ள பகுதி
    X
    புயல் மையம்கொண்டுள்ள பகுதி

    ஜாவத் புயல் உருவானது... பூரி அருகே நாளை மறுநாள் கரை கடக்கிறது

    புயல் காரணமாக, வட கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர ஒடிசாவில் மிக கனமழை பெய்யும் என்றும், நாளை மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்த தாழ்வு மண்டலம், இன்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. 

    புயலின் தாக்கத்தால் வட கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களும், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, நாயகர், குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் பேரிடர் மீட்பு படையினர்

    தொடர்ந்து முன்னேறும் புயலானது, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை சனிக்கிழமை காலை அடையும். அதன்பிறகு, மீண்டும் வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரமாக நகர்ந்து, டிசம்பர் 5-ஆம் தேதி மதியம் பூரி அருகே கரைகடக்க வாய்ப்புள்ளது என்று என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார். 

    புயல் காரணமாக, வட கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர ஒடிசாவில் மிக கனமழை பெய்யும் என்றும், நாளை மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புயலால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் போதிய உபகரணங்களுடன் தயார்  நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×