search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா எம்.பி.க்கள் போராட்டம்
    X
    பா.ஜனதா எம்.பி.க்கள் போராட்டம்

    எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை கண்டித்து பா.ஜ.க. எம்.பி.-க்கள் போராட்டம்

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக பா.ஜ.க. எம்.பி.க்கள் குற்றம்சாட்டினார்.
    பாராளுமன்ற மாநிலங்களவையில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது  அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் கண்ணிய குறைவாக நடந்து கொண்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    அந்த 12 எம்.பிக்களுக்கும் நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்.பி.க்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இதை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்தார்.

    இதேபோல் இரு அவைகளிலும் இந்த பிரச்சினையை கிளப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்புவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    இதை கண்டித்து பாராளுமன்றத்தின் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று காலை ஆளும் பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். 

    எதிர்க்கட்சி எம்.பி.-க்களின் நடவடிக்கை ஒழுங்கீனமானது என அவர்கள் குற்றம்சாட்டினார். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு காந்தி சிலையில் இருந்து அம்பேத்கர் சிலை வரை அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    Next Story
    ×