search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசிய பேரிடர் மீட்பு படை
    X
    தேசிய பேரிடர் மீட்பு படை

    ஜாவத் புயல் எச்சரிக்கை- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படைகள்

    புயலால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக (ஜாவத் புயல்) வலுப்பெறும் எனவும், இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நாளை காலை கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் சின்னம் காரணமாக, மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ள பகுதி

    புயலால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 64 குழுக்கள் பணியமர்த்தப்படுகின்றன. 

    மிகவும் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஏற்கனவே 46 குழுவினர் முகாமிட்டுள்ளதாகவும், 18 குழுவினர் எந்த நேரமும் அங்கு செல்ல தயார் நிலையில் இருப்பதாகவும் தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குனர் அதுல் கர்வால் தெரிவித்தார். ஒவ்வொரு குழுவிலும் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களிடம் கம்பம் வெட்டும் கருவிகள், வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் மின்சார ரம்பங்கள், ரப்பர் படகுகள் மற்றும்  மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளன. 


    Next Story
    ×