search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்?

    ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட பெங்களூரு டாக்டர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பெங்களூருவில் வெளிநாட்டு டாக்டர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டதால் அவருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியிருக்கும் என கருதப்படுகிறது.
    பெங்களூரு:

    உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில் 2-வது அலையின் பாதிப்பு குறைந்து வந்தது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    30 நாடுகளில் அதிகார பூர்வமாக ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆகிய 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிக்கு 2 டோஸ் போடப்பட்ட சான்றிதழ் இருந்துள்ளது. இவர் துபாய் வழியாக இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளார். கடந்த 20-ந் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அன்று இரவே அந்த தென்னாப்பிரிக்க பயணியின்
    கொரோனா
    சோதனை முடிவு பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    ஆனால் அவர் அறிகுறி இல்லாத நோயாளி என்பதால் அவர் தங்கிய ஓட்டலில் தனிமைப்படுத்தப்படி பெங்களூரு மாநகராட்சி அறிவுறுத்தியது. இதனிடையே 22-ந் தேதி அவர் தனியார் டெஸ்ட் மையத்தில் எடுத்த சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதை மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய அவர் மறுநாளே துபாய் சென்றுவிட்டார்.

    இந்த நிலையில்தான் அவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் துபாயில் இருந்து வரும்போது நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தது எப்படி? அது பொய்யான சான்றிதழா? இல்லை துபாய் சோதனையில் இவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்படவில்லையா? அதோடு 20-ந்தேதி பாசிட்டிவ் என்று வந்தவருக்கு, 23-ந்தேதியே நெகட்டிவ் என்று வந்தது எப்படி? தனியார் நிறுவனத்தில் மீண்டும் சோதனை செய்ததில் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லையா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் இப்போது துபாய் சென்றுவிட்டதால் துபாய் அரசு அவரை தேடி தனிமைப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

    அவர் மூலமாக பெங்களூருவில் 24 முதல் நிலை தொடர்பில் இருந்தவர்கள், 240 இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 264 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

    இதனிடையே ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட மற்றொரு நபரான பெங்களூரு டாக்டர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பெங்களூருவில் வெளிநாட்டு டாக்டர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டதால் அவருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியிருக்கும் என கருதப்படுகிறது.

    அவருடன் முதல் நிலை தொடர்பில் இருந்த 13 பேர், 2-ம் நிலை தொடர்பில் இருந்த 205 பேர் என மொத்தம் 218 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேருக்கு
    கொரோனா
    உறுதி ஆகி உள்ளது.

    அவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஜீன் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பெங்களூரு டாக்டர் பலரை சந்தித்து இருக்கலாம் என்பதால் அவர்களை தேடி பிடித்து பரிசோதனை செய்யும் பணிகளில் சுகாதார துறையினர் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.

    இதனிடையே ஜீன் சோதனை முடிவில் அவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும் பரிசோதனை முடிவு வந்தபிறகே இதுபற்றி தெரியவரும் என்கின்றனர் அதிகாரிகள். இந்த நிலையில் 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதார துறையினர் இப்போதே தேட தொடங்கி உள்ளனர்.


    Next Story
    ×