search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    மாநில அரசுகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை- ஒமிக்ரானை தடுக்க நடவடிக்கை

    மாநிலங்களில் ஒமிக்ரான் பரவுதலை எவ்வாறு தடுக்க வேண்டும்? அதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் விளக்கி கூறினார்.
    புதுடெல்லி:

    புதிய கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் உருவான இந்த வைரஸ் தற்போது 17 நாடுகளில் பரவி உள்ளது. இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருப்பதால் குறுகிய நாட்களிலேயே உலகில் பெரும்பாலான நாடுகளில் நோய் பரவி விடும் என்ற அச்ச நிலை உருவாகி இருக்கிறது.

    எனவே நோய் பரவிய நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. மேலும் பல நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை முடிவு, கட்டாய தனிமைப்படுத்துதல் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.

    இதன்படி 69 நாடுகள் இதுவரை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதில் பல நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாட்டு பயணிகளுக்கு தடை விதித்து இருக்கின்றன.

    இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை. பெங்களூரில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்படுகிறது. அவருக்கு எந்த வகை பாதிப்பு என்று பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முடிவுகள் வந்த பிறகு தான் தெரியவரும்.

    அதே நேரத்தில் இந்தியாவில் ஏற்கனவே ஒமிக்ரான் பரவி இருக்க வாய்ப்பு இருப்பதாக சில நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். இல்லை என்றாலும் கூட பல நாடுகளிலும் நோய் பரவி இருப்பதால் இந்தியாவுக்குள் எளிதாக ஊடுருவி விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து மாநிலங்களும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் மாநில அரசுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்த நிலையில் இன்று மத்திய அரசு மாநில அரசுகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டது.

    ஒமிக்ரான் வைரஸ்


    மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் இன்று அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநில சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலமாக அவர் ஆலோசனை நடத்தினார்.

    தமிழ்நாட்டில் இருந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    மாநிலங்களில் ஒமிக்ரான் பரவுதலை எவ்வாறு தடுக்க வேண்டும்? அதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ராஜேஷ் பூசன் விளக்கி கூறினார். மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

    இத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதையும் கேட்டறிந்தார்.

    இந்தியாவில் ஏற்கனவே கொரோனா 2 அலைகள் தாக்கி உள்ளன. ஒமிக்ரான் மூலம் 3-வது அலை பரவி விடாமல் தடுக்கும்படி அனைத்து மாநிலங்களும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று ராஜேஷ் பூசன் கூறினார்.

    ஏற்கனவே 2 அலைகள் தாக்கிய போது ஏற்பட்ட பாதிப்புகளை படிப்பினையாக கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து தயாராக இருக்கும்படி அவர் கூறினார்.


    Next Story
    ×