search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    டிரோன் தொழில் நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

    நாடு முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு பயனளிக்கும் வகையில் இயங்கக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக டிரோன் தொழில்நுட்பத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
    லக்னோ :

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள், மத்திய பாதுகாப்பு படையினரின் இயக்குனர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் 56-வது மாநாடு உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    3 நாள் நடந்த இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் நேற்று முன்தினம் நடந்த அமர்வுகளில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து நேற்று நடந்த மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடிமட்ட அளவிலான காவல் தேவைகளுக்கு எதிர்கால தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்காக உள்துறை மந்திரியின் தலைமையின் கீழ் உயர்மட்ட போலீஸ் தொழில்நுட்ப திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

    பொதுமக்களின் வாழ்வில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இதற்கு கோவின், அரசின் இ-மார்க்கெட், உடனடி நிகழ்நேர கட்டண முறையான யு.பி.ஐ. உள்ளிட்ட உதாரணங்களை கவனத்தில் கொள்ள முடியும்.

    இதைப்போல நாடு முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு பயனளிக்கும் வகையில் இயங்கக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக டிரோன் தொழில்நுட்பத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

    மேலும் காவல்துறை தொடர்பான அனைத்து சம்பவங்களையும் பகுப்பாய்வு செய்து, அதை ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட கற்றல் வழிமுறையாக மாற்றுவதற்கு வழக்கு ஆய்வுகளை உருவாக்க வேண்டும்.

    பொதுமக்களிடம் போலீசாரின் அணுகுமுறையில், குறிப்பாக கொரோனாவுக்குப்பின் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றம் பாராட்டுக்குரியது.

    போலீசார் எதிர்கொள்ளும் வழக்கமான சில சவால்களை சமாளிக்க, ஹேக்கத்தான்கள் மூலம் தொழில்நுட்ப தீர்வுகளை தேடுவதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    முன்னதாக சிறப்பாக பணியாற்றிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

    இந்த மாநாட்டில் 3 நாட்களும் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×