search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க வரிசையில் நின்ற பக்தர்கள்
    X
    சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க வரிசையில் நின்ற பக்தர்கள்

    கேரளாவில் மழை குறைந்ததால் சபரிமலையில் ஒரே நாளில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

    கேரளாவில் மழை குறைந்ததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது ஒரே நாளில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் நாகர்-2

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது. அதன்படி ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வந்தது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா உத்தரவிட்டார்.

    தற்போது பத்மனம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்ததால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இரவு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமையில் பலிபூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய வரிசையாக அனுமதிக்கப்பட்டனர்.

    பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் போலீசார் 50 பேர் கொண்ட குழுக்களாக பக்தர்களை பிரித்து ஆற்றை கடக்க அனுமதித்தனர். முன்னதாக நிலக்கல் பகுதியில் பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து கேரள போக்குவரத்து கழக சிறப்பு பஸ்களில் பக்தர்கள் பம்பைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சபரிமலை அய்யப்பன் சன்னிதானம் சென்றனர்.

    நேற்று அய்யப்ப பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களை விட அதிகரித்து கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 19 ஆயிரத்து 987 பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    Next Story
    ×