search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா மழை
    X
    ஆந்திரா மழை

    ஆந்திராவில் கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு : 17 பேர் பலி

    அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா நோக்கி திரும்பியதால் அங்கு கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
    திருப்பதி: 

    அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் நேற்று இரவு மழை சற்று திசை மாறியதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருந்த அதி கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது. இந்த நிலையில் அதி கன மழை எச்சரிக்கை இந்த மாதத்தில் 2-வது முறையாக சென்னையில் திரும்ப பெறப்பட்டது.

    ஆந்திரா நோக்கி நேற்று மழை சென்றதால், சென்னை தப்பியது. ஏற்கனவே கடந்த 7 மற்றும் 11-ந்தேதிகளில் சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இயல்பு நிலைக்கு சென்னை திரும்பி வந்து இருக்கும் இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆந்திராவில் பெய்த அதி கனமழை சென்னையில் பெய்து இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

    ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சித்தூரில் ஏராளமான ஆடு, மாடுகள் மக்களின் கண் முன்பே நீரில் அடித்துச் செல்லப் பட்டன.

    கல்யாணி அணை நிரம்பியதால், 2 மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் சிக்கியதால் அதில் தவித்த 4 பேரை காப்பாற்ற 6 பேர் சென்றனர். பிறகு அவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு 10 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஆந்திரா மழை

    பலத்த மழைக்கு ஆந்திராவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில், சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  காணொலி மூலம் உரையாடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் பேசியபோது ஆந்திராவில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கினார். அப்போது ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்...

    Next Story
    ×