search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை
    X
    சபரிமலை

    சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய 10 இடங்களில் உடனடி ஆன்லைன் முன்பதிவு வசதி

    உடனடி முன்பதிவுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை தவிர பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம் :

    சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் முன்பதிவு செய்தும் தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அதனடிப்படையில் உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் (ஸ்பாட் புக்கிங்) புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இந்தநிலையில் சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தான அறிக்கையை நேற்று கேரள அரசு, ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

    அதில் நிலக்கல், எருமேலி, குமுளி, திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோவில், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், கொட்டாரக்கரை மகா கணபதி கோவில், பந்தளம் வலிய கோயிக்கல் கோவில், பெரும்பாவூர் தர்மசாஸ்தா கோவில், கீழில்லும் மகாதேவர் கோவில் ஆகிய 10 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் உடனடி முன்பதிவு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடனடி முன்பதிவுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை தவிர பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×