search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருமணம்
    X
    குழந்தை திருமணம்

    கேரளாவில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு- 8 மாதங்களில் 45 வழக்குகள் பதிவு

    கேரளாவில் ஆண்டுக்காண்டு குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக திகழ்வது திருமணங்கள்.

    இந்தியாவில் திருமணம் செய்ய குறைந்தபட்சம் ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வயதில் செய்யப்படும் திருமணங்களை மட்டுமே அரசு அங்கீகரிக்கும்.

    இந்த வயதுக்கு குறைவாக திருமணம் செய்வோர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

    ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் பெண்கள் திருமண வயதை அடையும் முன்பே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்க மாநிலங்களில் குழந்தைகள் நல பிரிவு செயல்படுகிறது.

    குழந்தை திருமணங்கள் பற்றிய தகவல் கிடைத்தால் இவர்கள் சம்பவ இடத்திற்கே சென்று அத்திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு, இத்திருமணங்களை செய்து வைப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கிறது.

    அந்த வகையில் கேரளாவில் ஆண்டுக்காண்டு குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 41 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரையிலான 8 மாதங்களில் மட்டும் 45 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இதில் அதிகபட்ச புகார்கள் வயநாடு மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இங்கு 27 புகார்களும், இந்த ஆண்டு இதுவரை 36 புகார்களும் பதிவாகி உள்ளது.

    இதுபோல இடுக்கியில் 3 புகார்களும், திருச்சூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் தலா ஒரு புகார்களும் பதிவாகி இருந்தது.

    கேரளாவில் கடந்த 2020 - 2021-ம் ஆண்டில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருக்கு மட்டும் 145 புகார்கள் வந்துள்ளன. இதில் 109 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

    குழந்தை திருமணங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்கியதோடு, இது பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2500 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் குழந்தை திருமணங்களை கோர்ட்டு நடவடிக்கை மூலம் ரத்து செய்வதோடு அவர்களின் உடமைகளை மீட்டு தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×