search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஆர்எஸ் அணை
    X
    கேஆர்எஸ் அணை

    கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது- கபினி அணையும் 3வது முறையாக நிரம்பியது

    கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி நேற்று முழுமையாக நிரம்பியது. இதுபோல் கபினி அணையும் இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது.
    மைசூரு:

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணராஜசாகர் அணை(கே.ஆர்.எஸ்.). இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இதனால் இந்த அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு பகுதியும் அமைந்துள்ளது.

    அந்த பகுதிகளில் தற்போது தொடர் கனமழை பெய்து வருவதாக கே.ஆர்.எஸ். அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் இந்த அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்தும் வினாடிக்கு 19 ஆயிரத்து 341 கனஅடியாக இருந்தது. இதனால் அணை எப்போது வேண்டுமானாலும் நிரம்பிவிடும் என்று கருதப்பட்டது.

    அதன்படி நேற்று காலையில் கே.ஆர்.எஸ். தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி முழுமையாக நிரம்பியது. 11 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் கே.ஆர்.எஸ். நிரம்புவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 972 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வினாடிக்கு 10 முதல் 20 ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுபற்றி காவிரி நீர்ப்பாசன துறை அதிகாரி சங்கரே கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று(நேற்று) காலையில் கே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பிவிட்டது. காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 972 கன அடி நீர் வந்தது. பின்னர் மதியம் 12 மணியளவில் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 152 அடியாக குறைந்தது. அணை நிரம்பி விட்டதாலும், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருவதாலும் 16 மதகுகள் வழியாக உபரி நீர் எப்போதும் வேண்டுமானாலும் திறக்கப்படலாம். அதாவது அணையில் இருந்து வினாடிக்கு 10 முதல் 20 ஆயிரம் கன அடி நீர் வரை திறந்து விடப்படலாம். இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் யாரும் நதிக்கரைகளில் குளிப்பது, மீன் பிடிப்பது, கால்நடைகளை கழுவுவது, பரிசல்களில் செல்வது, மணல் அள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும் சுற்றுலாத் தலங்களிலும், படகு குழாம்களிலும் படகு சவாரி சேவை நடத்தப்படக்கூடாது. அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 3 ஆயிரத்து 653 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் நீரில் தத்தளிக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே உள்ள கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி இருக்கிறது. இந்த ஆண்டில் கபினி அணை 3-வது முறையாக நிரம்புவது குறிப்பிடத்தக்கது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284(கடல் மட்டத்தில் இருந்து) அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணையில் 2,283.40 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 503 ஆக இருந்தது. இதனால் அணை மீண்டும் முழுமையாக நிரம்பி விட்டதாக நீர்ப்பாசன துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

    அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 876 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.



    Next Story
    ×